பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஒருதலைக் காதலால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

பக்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி இரவு திருமணச் சடங்குகள் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தன. மணமேடையில் மணமகனுடன் ஆர்த்தி நின்றுகொண்டிருந்தபோது, கூட்டத்திற்குள் புகுந்த தீபந்து என்ற வாலிபர், திடீரெனத் துப்பாக்கியை எடுத்து ஆர்த்தியின் வயிற்றில் சுட்டுவிட்டுத் தப்பியோடினார்.

துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு உறவினர்கள் அலறியடிக்க, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆர்த்தியை மீட்டு வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளியான தீபந்துவை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், தீபந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்த்தியை ஒருதலையாகக் காதலித்து வந்ததும், ஆர்த்தி அவரைத் திட்டவட்டமாக மறுத்து வந்ததும் தெரியவந்தது. ஆர்த்தியின் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வெறியில் இருந்த தீபந்து, கடந்த ஆண்டு ஆர்த்திக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தையும் மிரட்டல் விடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் பஞ்சாயத்து கூட்டி தீபந்துவை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர். இருப்பினும் அடங்காத அந்த நபர், ஆர்த்திக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்ததை அறிந்து, மணமேடையிலேயே அவரைத் தீர்த்துக்கட்ட முயன்றுள்ளார்.

மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆர்த்தியின் தந்தை மற்றொரு வேதனையில் கண்ணீர் விடுகிறார். ஆர்த்தி குணமடைந்து வந்தாலும், அவரை ஏற்க மணமகன் வீட்டினர் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். “உங்கள் மகள் மீது பாய்ந்த குண்டு எங்கள் மகன் மீது பாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? முன்னரே இது தெரிந்திருந்தால் இந்தத் திருமணத்திற்கே சம்மதித்திருக்க மாட்டோம்” என மணமகன் வீட்டார் கூறியிருப்பது ஆர்த்தியின் தந்தையை நிலைகுலைய வைத்துள்ளது.

ஒருபுறம் கொடூரமான தாக்குதல், மறுபுறம் சமூகத்தின் பார்வையா என ஆர்த்தியின் தந்தை தவித்து வருவது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பீகாரில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.