கர்நாடக மாநிலம் யாதகிரியில் தன்னைத்தானே சாமியார் என்று கூறிக்கொள்ளும் ஒருவர், 7 வயது சிறுமிக்கு மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாதகிரி மாவட்டம் கோகி பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன முட்டவா என்ற இந்த சாமியாரை தரிசிக்க, மகாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது மகளுடன் வந்துள்ளனர். அப்போது அந்தச் சிறுமியைத் தனது மடியில் அமரவைத்து சாமியார் முத்தம் கொடுத்ததை, அந்தப் பெற்றோரே வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், சாமியாரின் செயல் அருவருக்கத்தக்கது என்றும், ஆசி வழங்குவதாகக் கூறி சிறுமியிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலையிட்டு போலீசில் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து, மல்லிகார்ஜுன முட்டவா மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், “சாமியார் மீது எங்களுக்குப் புகாரில்லை” என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இருப்பினும், வீடியோவில் அந்தச் சிறுமி மிகுந்த தயக்கத்துடன் காணப்படுவதால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சாமியார், தான் தந்தையைப் போல பாசத்தில்தான் முத்தம் கொடுத்ததாகக் கூறி, இந்த வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
