நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்த வழக்கிலிருந்து அவர்கள் இருவரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளால் தொடரப்பட்ட இந்த வழக்கில், கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா ஆகியோர் சிறைவாசம் அனுபவித்த நிலையில், இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “நீதி வென்றுள்ளது” என அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், அரசியல் வட்டாரத்தில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
