தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிர்ச்சியூட்டும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, திமுக அரசுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மானாமதுரை ஆகாஷ் படுகொலை, காசிமேடு கவின் மரணம் மற்றும் நாமக்கல்லில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உள்ளிட்ட 5 முக்கிய சம்பவங்களை வரிசைப்படுத்தியுள்ள அக்கட்சி, “இது தமிழகமா அல்லது சுடுகாடா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

​திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகச் சாடியுள்ள தவெக, ரத்த ஆறாக ஓடிக்கொண்டிருந்த தமிழகம், இன்று பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரில் மிதப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்குப் பயமில்லாத ஒரு சூழல் நிலவுவதே இதுபோன்ற கொடூரங்களுக்குக் காரணம் என்றும், விளம்பர அரசியலை விட்டுவிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது. விஜய்யின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் களத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.