தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
நடிகர் விஜயின் இரண்டாவது மாநில மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலரும் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல் முயற்சியில் வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
தன்னுடைய முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக மிக பிரம்மாண்டமாக விஜய் நடத்தி முடித்த நிலையில் இன்று இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாநாட்டில் பேசிய விஜய், மக்களுடைய அன்பும் ஆசியும் நம்முடன் இருக்கும் போது பாசிச பாஜகவுடன் மறைமுக நேரடி கூட்டணி எதற்கு? நாம் உலக மகா ஊழல் கட்சியா என்ன? மக்கள் சக்தியை நம்முடன் அணி அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் எதற்கு?
நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும். ஒரு பக்கம் ஆர் எஸ் எஸ்- க்கு அடிபணிந்து கொண்டு மறுபக்கம் மதசார்பற்ற கூட்டணி என ஏமாற்றிக் கொண்டிருப்பது போல நம்ம கூட்டணி இருக்காது. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும். அப்படி என்றால் யார் கூட்டணிக்கு வருகிறார்கள் என்ற கேள்வி இருக்கும். அதற்கெல்லாம் சஸ்பென்ஸ் உடன் சஞ்சாரம் செய்யுங்கள்.
எதிர்காலம் வரும். என் கடமை வரும். எம்ஜிஆர் யாருன்னு தெரியும்ல? அவரது மாஸ்னா என்னன்னு தெரியுமா? அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. கனவு கூட காண முடியாது. இப்போ அவர் ஆரம்பித்து அந்த கட்சியை கட்டி காய்க்கிறது யார்? அந்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது என நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமா என்ன?
அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு போடணும் எப்படிப்பட்ட ஆட்சி அமையனும் அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பாஜக என்ன வேஷம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டில் அவர்கள் வித்தை வேலைக்காகாது என விஜய் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது இன்றைக்கு நாட்டிலே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சிலர் இஷ்டம் போல கருத்துகளை பேசி வருகின்றனர். அவர்கள் அறியாமையின் காரணமாகவே பேசுவதாக கருதுகிறேன். இது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சி தலைவராக இருக்க முடியும்?
இது தலைவர்கள் தோற்றுவித்த கட்சி. ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல திட்டங்களை வகுத்து தனித்து நின்ற கட்சி. எடுத்த உடனே மரம் வராது. முதலில் செடி வைத்து அதை பராமரித்து பின்னர் அது மரமாகி பூக்கள் பூத்து கனி கொடுக்கும். அதுபோலத்தான் ஒரு அரசியல் கட்சி இயக்கமும். எடுத்த உடனே எதையும் செய்ய முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
