திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாமியார் வேடமணிந்த 65 வயது மூதாட்டி ஒருவர், ஹார்டுவேர்ஸ் கடையில் 85 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீபால்சிங் என்பவரது கடைக்கு வந்த அந்த மூதாட்டி, தானும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று கூறி உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
பின்னர் கடையிலிருந்த சாமி படத்தின் பூவை எடுத்து, அதை மந்திரம் செய்வது போல் குங்குமமாக மாற்றி, அங்கிருந்தவர்களின் நெற்றியில் திலகமிட்டுள்ளார். இதன் பிறகு அவர்கள் ஒருவித மயக்க நிலையில் இருந்தபோது, கடையின் கல்லாவிலிருந்த 85 ஆயிரம் ரூபாயை அந்த மூதாட்டி அபேஸ் செய்துள்ளார்.
சாமியார் திலகமிட்ட பிறகு, அவர் சொன்னதையெல்லாம் பொம்மை போலக் கேட்டு ஊழியர்களே பணத்தை எடுத்து அவரிடம் கொடுப்பது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த மூதாட்டி, கடையின் ஊழியர் மூலமாகவே இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் சென்று தப்பியோடியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீபால்சிங், இது குறித்து பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்களைக் குறிவைத்து அந்த மூதாட்டி இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
