உத்தரப்பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஒருவரின் பொறுப்பற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்வகத்ரா பிளாக்கிற்கு உட்பட்ட ராம்பூர் காஸ் கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

மேலும் சாலை இன்னும் முழுமையாக உலராத நிலையில், சமாஜ்வாதி கட்சி கொடி கட்டப்பட்ட ஃபார்ச்சூனர் கார் ஒன்று அந்த கட்டுமானத்தில் உள்ள சாலையின் மீது அத்துமீறி வேகமாகச் சென்றது. இதனால் புதிதாக போடப்பட்ட சாலை முற்றிலும் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த கிராம மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.

“>

இந்த விவகாரம் அம்மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, சமாஜ்வாதி கட்சியினரின் இத்தகைய செயல்களை “ரவுடித்தனம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் பணத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை முடக்குவதே அக்கட்சியினரின் நோக்கம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம், இந்தச் சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. வளர்ச்சிப் பணிகளைச் சீர்குலைத்த அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.