மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 19 வயது மாணவர் அதர்வா சதுர்வேதி, மருத்துவப் படிப்பிற்கான பொருளாதார நலிவுற்ற பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தானே நேரில் ஆஜராகி வாதாடி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் 530 மதிப்பெண்கள் பெற்ற போதிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பொருளாதார நலிவுற்ற பிரிவினருக்கான இடஒதுக்கீடு நடைமுறையை மாநில அரசு செயல்படுத்தாத காரணத்தால் அவருக்கு எம்பிபிஎஸ் சீட் மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்காத நிலையில், மனம் தளராத அதர்வா தானே சட்ட மனுக்களைத் தயாரித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர் அதர்வாவிற்கு உடனடியாக எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்க உத்தரவிட்டது.

ஒரு மாணவர் தனது உரிமையை நிலைநாட்ட வழக்கறிஞர் இன்றி தானே நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டதை நீதிபதிகள் வெகுவாகப் பாராட்டினர். தகுதியுள்ள மாணவர்கள் கொள்கை முடிவுகளின் தாமதத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவருக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு வாரத்திற்குள் இடம் ஒதுக்க வேண்டும் என மத்தியப் பிரதேச அரசுக்கும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.