சட்டமன்றத்தில் ஆளுநர் நேற்று தனது கடமையைச் சரியாக ஆற்றாமல் பாதியிலேயே வெளியேறியது, அவரது வழக்கமான அடாவடிப் போக்குதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஆளுநர் உரையை மக்கள் பிரதிநிதிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே மரபு என்றும், ஆனால் ஆளுநர் திட்டமிட்டு அவையை அவமதித்து வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மற்றும் ‘தேசிய கீதம்’ தொடர்பாக ஆளுநர் முன்வைக்கும் வாதங்கள் திமுக அரசுக்கு எதிரான திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சானதன சக்திகளின் ‘திராவிட ஒவ்வாமையே’ ஆளுநரின் இத்தகைய செயல்களுக்குக் காரணம் என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும் எனத் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆளுநரின் இந்தச் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள வழக்கமான தேநீர் விருந்தை இந்த ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) புறக்கணிப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
