இந்திய அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசி தேர்வுக்குழுவினருக்கு பலத்த பதிலடி கொடுத்துள்ளார். இப்போட்டியில் சக வீரர் பிரியான்ஷ் ஆர்யா ரன் அவுட் ஆனதில் ஏற்பட்ட சர்ச்சை தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்க  வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், 4-ஆவது வரிசையில் களம் புகுந்த ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் விளையாடினார். இந்திய அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 14 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். எனினும், மறுமுனையில் தூண் போல நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 112 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

போட்டியின் 13-ஆவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா இடையே ஏற்பட்ட மோசமான புரிதலற்ற தன்மையால் ஒரு ரன் அவுட் சர்ச்சை வெடித்தது. ருதுராஜ் அடித்த பந்தை நோக்கி இரண்டு ரன்கள் ஓட முயன்றார். ஆனால், மறுமுனையில் இருந்த பிரியான்ஷ் ஆர்யா இரண்டாவது ரன்னுக்கு மறுப்பு தெரிவித்தார். அதற்குள் ருதுராஜ், பிரியான்ஷை கவனிக்காமல் நான்-ஸ்டிரைக்கர் எண்ட் நோக்கி வேகமாக ஓடி வந்துவிட்டார்.

விக்கெட் கீப்பரின் கால் தடுத்ததால் பிரியான்ஷ் ஆர்யாவால் கிரீஸை அடைய முடியவில்லை. இறுதியில் இரு பேட்ஸ்மேன்களும் ஒரே பக்கத்தில் வந்து நின்றனர். இதில் பிரியான்ஷ் ஆர்யா அவுட் என அறிவிக்கப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால், தவறு செய்த ருதுராஜ் தான் அவுட் ஆகியிருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி, ரன் ஓடும்போது இரண்டு பேட்ஸ்மேன்களும் பிட்ச்சின் நடுவே ஒருவரையொருவர் கடக்காமல், ஒரே பக்கத்தில் உள்ள கிரீஸை நோக்கி ஓடிவந்தால், அந்த குறிப்பிட்ட கிரீஸிலிருந்து யார் அதிக தூரத்தில் இருக்கிறாரோ அவரே ரன் அவுட் எனக் கருதப்படுவார். இந்த சம்பவத்தில், ருதுராஜ் கெய்க்வாட் முதலிலேயே ஓடிவந்து கிரீஸை அடைந்துவிட்டதால் அவர் பாதுகாக்கப்பட்டார். விக்கெட் கீப்பரால் தடுக்கப்பட்டு கிரீஸை அடைய முடியாமல் தூரத்தில் நின்ற பிரியான்ஷ் ஆர்யா விதியின்படி அவுட் என அறிவிக்கப்பட்டார்.