ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சேப்பல், தற்கால கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் இடையே உள்ள சமநிலை சீர்குலைந்து வருவது குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளார். நவீன கிரிக்கெட் விதிகள் பந்துவீச்சாளர்களை முற்றிலுமாக அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், பேட்டுகளின் தரம், மைதானங்களின் சிறிய எல்லைக் கோடுகள் மற்றும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களை முடக்கியுள்ளன என்றார்.
இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத்தைப் பாராட்டிய சேப்பல், அவரின் பேட்டிங் பிரையன் லாரா, கில்கிறிஸ்ட், சோபர்ஸ் போன்ற மாபெரும் வீரர்களை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், இவ்வளவு இளம் வீரரால் சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்களின் பந்துகளை மிக எளிதாக சிக்ஸர், பவுண்டரிகளுக்கு விரட்ட முடிகிறது என்றால், அது பந்துவீச்சாளர்களின் பலவீனத்தை அல்ல, கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய போக்கிலுள்ள பெரிய குறைபாட்டையே காட்டுகிறது என எச்சரித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை கிரெக் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார். இந்த விதி முற்றிலும் தொலைநோக்கு பார்வையற்றது என்றும், பேட்டிங் செய்யும் அணிக்கு மட்டுமே இது சாதகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விதியினால் விக்கெட்டுகள் சரிந்து அணி சரிவைச் சந்திக்கும் என்ற பயம் பேட்ஸ்மேன்களுக்கு இல்லாததால், அவர்கள் முதல் பந்திலிருந்தே பந்துவீச்சாளர்களைக் கதறவிடும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்; இதனால் பந்துவீச்சாளர்கள் மைதானத்தில் முற்றிலும் நிராயுதபாணியாக நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது என கிரெக் சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.
