ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தாலிபான் அரசு இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள போதிலும், பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளதுடன், பயங்கரவாத முகாம்களை மட்டுமே இலக்கு வைத்ததாக விளக்கம் அளித்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷித் கான் தனது ஆழ்ந்த வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்தத் துயரமான நேரத்தில் தனது நாட்டு மக்களுடன் உறுதுணையாக இருப்பதாகவும், இக்காயங்களிலிருந்து மீண்டு ஆப்கானிஸ்தான் ஒரு தேசமாக மீண்டும் எழுச்சி பெறும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.