அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள முக்கிய நகரங்கள் தரைமட்டமாகி வருகின்றன.

ஈரானின் அராக் நகரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பிறந்த சில நாட்களேயான ஒரு ஆண் குழந்தையும், அதன் இரண்டு வயது அக்காவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. மினாப் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட சிறுமிகள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 28 முதல் இதுவரை 1,444 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஈரானின் பதிலடி தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பதற்றம் தொற்றியுள்ளது.

குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பேரல் 106 டாலரைத் தொட்டுள்ளது.

லெபனான் மீதும் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், அங்கிருந்து சுமார் 10 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

போரின் தீவிரம் குறையாத நிலையில், தனது சீனா பயணத்தை ரத்து செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒரு ‘காகிதப் புலி’ (Paper Tiger) என்று விமர்சித்துள்ளதுடன், மற்ற நாடுகளும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறார்.