புது தில்லியில் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக எத்தகைய சவாலான பணிகளையும் மேற்கொள்ளத் துணியும் மனிதர்களின் போராட்டக் குணத்தைப் பறைசாற்றும் வகையில், மின்சாரக் கம்பத்தில் ஏறி அபாயகரமான நிலையில் பணியாற்றும் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்சாரக் கம்பியில் சிறு உரசல் ஏற்பட்டாலும் உயிர் பறிபோகும் அபாயம் உள்ளது என்பதை அறிந்தும், எந்தவித அச்சமுமின்றி அந்த நபர் மின்கம்பத்தில் ஏறி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுகிறார்.

மின்கம்பத்தின் உச்சியில் நின்றபடி அவர் பணியாற்றும் போது, நடுக்கத்தில் அவரது கால்கள் அதிர்வதைக் காண முடிகிறது. இருப்பினும், கீழே இருந்து வீடியோ எடுப்பவரைக் கண்டதும், எவ்வித பதற்றமுமின்றி அவர் சிதறவிடும் புன்னகை பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தன் உயிரையே துச்சமென மதித்து உழைக்கும் இவரின் தியாகத்தை சமூகம் உணர வேண்டும்” என இணையவாசிகள் உருக்கமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.