உத்தரப் பிரதேசத்தில் இடுப்பு எலும்பு முறிந்த 73 வயது மூதாட்டி ஒருவர், தனது ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதற்காகத் தள்ளுவண்டியில் வைத்து வங்கிக்கு இழுத்துச் செல்லப்பட்ட அவலம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. மூதாட்டியால் நேரில் வர முடியாது எனத் தெரிந்தும், நேரில் வந்தால்தான் பணம் தரப்படும் என வங்கி நிர்வாகம் அடம் பிடித்ததால் இந்த கொடூரம் நடந்துள்ளது. இதுதொடர்பான நெஞ்சை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலாகி உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, பயந்துபோன வங்கி நிர்வாகம் உடனடியாக அதிரடி ஆக்ஷனில் இறங்கியது. அதிகாரிகள் நேரடியாக மூதாட்டியின் வீட்டிற்கே தேடிச் சென்று ஓய்வூதியப் பணத்தை வழங்கியதோடு, தங்கள் தவறுக்காகக் கைகளைக் கூப்பி நேரில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர். சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் இச்சம்பவம், தற்சமயம் இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
