ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அந்த அணியின் நட்சத்திர அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2025 ஜூன் மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல், சமீபகாலமாக டி20 போட்டிகளிலும் பெரிய அளவில் சோபிக்கத் தவறியதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இது குறிப்பாக கடந்த டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா குழு நிலையிலேயே வெளியேறியதும், மேக்ஸ்வெல்லின் மந்தமான ஆட்டமும் தேர்வாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய ஒப்பந்தப் பட்டியலில் மேக்ஸ்வெல் மட்டுமின்றி உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் போன்ற வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், ஆஷஸ் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ஜேக் வெதரால்ட் மற்றும் பிரெண்டன் டாக்கெட் ஆகியோருக்கு முதன்முறையாக மத்திய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் ஆஸ்திரேலிய அணி அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால், டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல் போன்ற அனுபவ வீரர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதைக் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது.