லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடந்த ஐபிஎல் தொடரின் போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் கே எல் ராகுலை மைதானத்திலேயே கடுமையாகச் சாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தற்போதைய ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்த அணியின் தற்போதைய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோருடன் சஞ்சீவ் கோயங்கா தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 27 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறும் ரிஷப் பண்டிற்கு இந்தச் சீசன் சவாலானதாக இருக்கும் என்றும் உரிமையாளரின் இந்தச் செயல் வீரர்களைக் காயப்படுத்துவதாகவும் ரசிகர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

மைதானத்தில் நடைபெற்ற இந்த விவாதம் பெரும் விவாதத்தைக் கிளப்பியதைத் தொடர்ந்து சஞ்சீவ் கோயங்கா இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

 

இது ஒரு நீண்ட தொடர் என்றும் தற்பொழுது தான் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தனது அணி வலிமையுடன் மீண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஒட்டுமொத்த அணியின் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் மைதானத்தில் வீரர்களுடன் விவாதிப்பதைத் தவிர்த்துவிட்டு இதுபோன்ற ஆலோசனைகளைத் தனி அறையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வீரர்களுக்குக் கிரிக்கெட் கற்றுக்கொடுக்க முயல வேண்டாம் என்றும் இணையவாசிகள் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.