ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்காக சுமார் 76 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் என்பவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கலாச்சார அமைச்சகம் அளித்துள்ள பதிலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, செய்தித்தாள்கள் மற்றும் இதர அச்சு ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவைக் குறிப்பிடும் விளம்பரங்களுக்காக மொத்தம் ரூ.76,13,129 செலவிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
மேலும் ஒரு தனிப்பட்ட அமைப்பின் விழாவிற்காக மக்கள் வரிப்பணத்தை அரசு விளம்பரச் செலவினங்களுக்குப் பயன்படுத்தியது ஏன் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவிற்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு மற்றும் இதர செலவுகள் குறித்த முழுமையான விவரங்களை வழங்காமல், விளம்பரச் செலவுகளை மட்டும் அமைச்சகம் தெரிவித்துள்ளதும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
