தொழில் வளம் மிக்க ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், கடும் போட்டிக்கு இடையே திமுகவின் மூத்த நிர்வாகியும் அமைச்சருமான ஆர்.காந்தியை வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தாஹிரா அபார வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலின் தொடக்கமே ராணிப்பேட்டையில் சர்ச்சையாகத்தான் இருந்தது. முதலில் அமைச்சர் காந்திக்குச் சீட் மறுக்கப்பட்டு, அவரது மகன் வினோத் காந்திக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர், தந்தைக்காக வினோத் காந்தி தானாக முன்வந்து விலகிக்கொள்வதாக அறிவித்த பின்பே ஆர்.காந்தி வேட்பாளராகக் களம் இறங்கினார். இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முடிவுகள் கண்ணாமூச்சி காட்டின. முதல் சில சுற்றுகளில் தவெக வேட்பாளர் தாஹிரா முன்னிலை வகித்தார். அதன் பிறகு, அமைச்சர் காந்தி ச பல சுற்றுகளில் முன்னிலைக்கு வந்தார். திமுக முகாமில் வெற்றி உறுதி எனப் பேசப்பட்ட நிலையில், கடைசி கட்டச் சுற்றுகள் முடிவுகளைத் தலைகீழாக மாற்றின.

இறுதிச் சுற்றில் அதிரடியாக வாக்குகளைக் குவித்த தவெக வேட்பாளர் தாஹிரா, 91,149 வாக்குகள் பெற்று 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுவரை 7 தேர்தல்களைச் சந்தித்து 4 முறை வெற்றி கண்டிருந்த சீனியர் அரசியல்வாதி ஆர்.காந்திக்கு, இது 4-வது தோல்வியாக அமைந்துள்ளது.

இந்தத் தொகுதியில் பாஜக கூட்டணியின் தமாகா வேட்பாளர் வி.எம். கார்த்திகேயன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தாரிக்கா சல்மான் உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர். இருப்பினும், போட்டி முழுக்க முழுக்க திமுக மற்றும் தவெக இடையே மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.