பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ வெகு தூரத்தில் இல்லை என இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள அனுப்கர் எல்லைப் பகுதியில் நேற்று ராணுவ வீரர்களுடன் சந்தித்து உரையாற்றிய அவர், “இந்த முறை, நாம் ‘ஆபரேஷன் சிந்தூர் 1.0’ போது கடைபிடித்த நிதானத்தை பின்பற்றப் போவதில்லை. இப்போது நாம் உறுதியாக பதிலடி கொடுப்போம். அந்த தாக்கம், பாகிஸ்தான் தான் உலக வரைபடத்தில் தொடர விரும்புகிறதா இல்லையா என யோசிக்க வைக்கும் வகையில் இருக்கும்,” என கூறினார்.

மேலும், “பாகிஸ்தான், உலக வரைபடத்தில் தொடர விரும்பினால், அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். நமது வீரர்கள் முழுமையாக தயார் நிலையில் உள்ளனர். கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால், அதற்கான சந்தர்ப்பம் விரைவில் வரும்,” என்றும் தெரிவித்தார். அவரது இந்த கூற்று பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2025ல், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக மே 7ஆம் தேதி, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் பகுதியிலுள்ள பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.