அண்ணன் இன்றி திருமணம் நடைபெறக்கூடாது என எண்ணிய தங்கைக்காக, ராணுவ வீரர்கள் அண்ணனாக நின்று அனைத்து சடங்குகளிலும் பங்கேற்ற சம்பவம், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பர்லி கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்லி கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்பவர் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்தார். அவரது அண்ணன் ஆஷிஷ் குமார், அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2024 பிப்ரவரியில் ‘ஆபரேஷன் அலர்ட்’ நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில், ஆராதனாவின் திருமணத்திற்கு அவரது அண்ணன் இல்லாத நிலை, குடும்பத்தை வேதனையில் ஆழ்த்தியது. இதனை உணர்ந்த, ஆஷிஷ் பணியாற்றிய ராணுவப் படைப்பிரிவில் உடன் பணியாற்றிய வீரர்கள், “நாம் தான் அவருக்கு அண்ணன்கள்” என்ற எண்ணத்துடன், அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து இமாச்சலத்திற்கு வந்தனர்.

திருமண நாளன்று, மணமகனை மேடைக்கு அழைத்துச் செல்வது, பூஜை, மணமாலை, கங்கணம், மற்றும் மாப்பிள்ளை வீடு செல்லும் வரை — ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து பாரம்பரிய கடமைகளையும், அந்த வீரர்கள் செய்ய, அரங்கில் இருந்த அனைவரும் நெகிழ்ந்தனர்.

 

மேலும், ஆராதனாவுக்கு திருமணப் பரிசாக, ராணுவ வீரர்கள் இணைந்து நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) ஒன்றையும் வழங்கினர். இது, ஒரு சகோதரன் தங்கைக்காக செய்யக்கூடிய பாசப்பூர்வ செயலாக பலராலும் பாராட்டப்பட்டது.

மேலும் இது தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியுள்ளது. இதுபற்றி ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அந்த வீரர்கள், “ஆஷிஷ் எங்கள் சகோதரன். அவரின் தங்கைக்கு அண்ணனாக நின்று, அவரது நினைவையும் பாசத்தையும் காக்க எங்கள் கடமை” என தெரிவித்தனர்.