காசோலை தொடர்பான பணப் பரிவர்த்தனைகளை விரைவாக முடித்து, பயனாளிகளுக்கு பணத்தை உடனடியாக வழங்கும் புதிய நடைமுறை இன்று  முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவின் அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொண்டு வருகின்றன. வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, 1 மணி நேரத்திற்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகள் ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும். டெபாசிட் செய்யப்பட்ட காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும் எனவும், வங்கிகள் இதை செய்ய தவறினால் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

1980களில் வங்கிகளில் காசோலை பரிசீலிக்க குறைந்தது ஒரு வாரம் எடுத்த நிலையில், பின்பு அது 3 நாட்களாகவும், 2008 முதல் 1 நாளாகவும் குறைந்தது. தற்போது அது 1 மணி நேரமாக குறைக்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதனால் பயனாளிகள் உடனடியாக பணம் பெறுவதோடு, நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.