மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பார்ஷி தாலுகாவின் ஹத்தீஜ் கிராமத்தில், பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாகப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் பாலாசாகேப் பாட்டீல் என்ற அந்த ஆசிரியர், பங்குச்சந்தையில் சுமார் 1.80 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளார்.
இந்த பெரும் நஷ்டத்தைச் சமாளிக்கவும், கடன்களை அடைக்கவும் தனது உறவினர்கள் மற்றும் பல்வேறு வழிகளில் அவர் வாங்கிய கடன்கள் அவருக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கோடை விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
மேலும் வியாழக்கிழமை நள்ளிரவில், யோகேஷ் பாட்டீல் தனது மனைவி மாதுரி, மகன்கள் அதர்வா மற்றும் ஷிவான்ஷ் ஆகியோருக்கு உணவில் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, அவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலை பால் கொடுப்பவர் வந்து பார்த்தபோதுதான் இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்த வைராக் காவல் துறையினர், உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யோகேஷ் பாட்டீல் தற்கொலைக்கு முன் எழுதிய 22 பக்க உருக்கமான கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்; அதில் தனக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் மற்றும் கடன்கள் குறித்து அவர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
