மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவை பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, ‘எம்23’ எனும் கிளர்ச்சிக்குழு கடந்த சில ஆண்டுகளாக காங்கோவில் செயல்பட்டு வருகிறது. ருவாண்டா அரசாங்கம், இந்த குழுவுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறப்படுகிறது. காங்கோவில் 2001 முதல் 2019 வரை ராணுவ ஆட்சி நடைப்பெற்றது. அந்த காலத்தில் ராணுவத் தளபதியாக இருந்த ஜோசப் கலிபா, அதிபராக பதவி வகித்தார். பின்னர் அவரது ஆட்சி முடிவுக்கு வந்ததும், அவர் நாடு விட்டு தப்பிச் சென்றார். தற்போதும் எம்23 குழுவுக்கு ஆதரவு அளித்து வருகிறார் என்றும், சமீபத்தில் அந்த குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோசப்பின் ஆட்சிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம், தேசதுரோகம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை, பாலியல் வன்கொடுமை, சித்ரவதை மற்றும் கிளர்ச்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டன. இதுகுறித்து ராணுவ நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து, ஜோசப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் தலைமறைவில் உள்ளதால், கைது செய்து தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
