வியட்நாமில் ஒரு ஆறு வயது சிறுவன் விளையாட்டின் போது தற்செயலாக 2 செ.மீ நீளமுள்ள இதய வடிவ காந்தத்தை விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. இதை அவனது பெற்றோர் உடனடியாக கவனித்து, அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எக்ஸ்-ரே பரிசோதனையில், காந்தம் சிறுவனின் குடலில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இது குடலில் துளைகள் அல்லது திசு இறப்பு (நெக்ரோசிஸ்) ஏற்படுத்தக்கூடும் என்பதால், மருத்துவர்கள் உடனடியாக எண்டோஸ்கோபி மூலம் அந்த காந்தத்தை அகற்றினர். வியட்நாமின் வின்-லாங்கில் உள்ள ஜுயென் பொது மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, அன்று மாலையே சிறுவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவர் ஒருவர் கூறுகையில், “சிறுவனை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது. காந்தம் பதுங்கியதாக இல்லாததால் உடலில் காயங்கள் ஏற்படவில்லை, ரத்தப்போக்கும் ஏற்படவில்லை. மேலும் தாமதமாகியிருந்தால், ஜீரண மண்டலத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்” என்றார். மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நாணயங்கள், பட்டன் பேட்டரிகள், காந்தங்கள் போன்ற சிறிய பொருட்கள் எட்டாதவாறு பெற்றோர் பாதுகாக்க வேண்டும் என்றும், ஏதேனும் விழுங்கியிருக்கலாம் என சந்தேகித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
