தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசினார்.

“தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். வரும் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவதுடன், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். 2026 தேர்தலுக்குப் பிறகும் மு.க.ஸ்டாலின் அவர்களே மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார்.

சமீபகாலமாக சில கட்சிகள் எழுப்பி வரும் ‘ஆட்சியில் பங்கு’ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆட்சியில் பங்கு அல்லது அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை மதிமுக முன்வைக்கவில்லை. அத்தகைய நோக்கம் எங்களது கட்சிக்கு எப்போதும் கிடையாது” எனத் தெளிவுபடுத்தினார்.

மத்திய பட்ஜெட் குறித்துப் பேசிய வைகோ, அது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். “சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களைக் கருத்தில் கொண்டு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது ஒரு ஏமாற்று பட்ஜெட். குறிப்பாக, தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்களுக்குக் கூட மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை” என அவர் குற்றம் சாடினார்.