தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் விஜய், தனது வழக்கமான பாணியில் தொண்டர்களைக் குஷிப்படுத்தியதுடன் எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
“என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு எனது முதற்கண் வணக்கமும் நன்றியும். தேர்தல் ஆணைய விதிகளின்படி நான் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் எப்போதும் என் மனதிற்கு மிக நெருக்கமானவர்கள்தான்” என்று நெகிழ்ச்சியோடு தனது உரையைத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், நாம் ஆட்சிக்கு வந்தபின் 6 மாதங்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம், இப்பொழுது 6 நாட்கள்கூட அமைதியாக இருக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் என்றும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த அரை மணி நேரத்திலேயே தங்களுக்குள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர்களின் இந்த நிலைமையைப் பார்க்கும்போது கல்யாண வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்து எல்லாவற்றிற்கும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பவர்களைப் போலத் தோன்றுகிறது எனத் திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் எதார்த்தமாகப் பேசியுள்ள இந்த அரசியல் உரை, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் படுவேகமாகப் பரவி இணையம் எங்கும் செம வைரலாகி வருகிறது.
