தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட ‘நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்’ பங்கேற்று உரையாற்றினார். திருச்சி தனியார் கல்லூரி மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது,
தேர்தல் ஆணையத்தின் பதிவேடுகளின்படி நான் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் இதயமாக திருச்சி விளங்குவதைப் போல, என் இதயத்தில் எப்போதுமே வீற்றிருப்பது திருச்சி கிழக்குத் தொகுதிதான்.
நாங்கள் ஆட்சி அமைத்த பிறகு ஆறு மாதங்களுக்கு எதுவும் பேச மாட்டோம் என்று சொன்னவர்கள் எல்லாம், வெறும் ஆறே நாட்களில் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். கல்யாண வீடுகளில் கூட தவெக ஆட்சியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தனது முதல் தேர்தலில் கூட இந்த அளவுக்கு வாக்குச் சதவிகிதம் வாங்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் எங்களுக்குப் பேராதரவை வழங்கியுள்ளனர்.
நான் எம்.ஜி.ஆர். அளவுக்குப் பெரிய ஆள் இல்லை. ஆனால், பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் நின்று மக்களுக்குச் சேவை செய்வேன். மக்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இந்த ஆட்சியில் நிச்சயம் நன்மைகள் விளையும். என்னை கேலியும் கிண்டலும் செய்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்; தயவுசெய்து உங்கள் கேலிகளை நிறுத்திவிடாதீர்கள். அதுதான் எனக்கு மேலும் உழைப்பதற்கான சக்தியைக் கொடுக்கிறது. நீங்கள் பேசப் பேசத்தான் நான் மக்களுக்கு இன்னும் அதிகமாக நல்லது செய்வேன்.
அதிகாரம் செய்பவர்களும், ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் ‘கோட்-சூட்’ அணிய வேண்டுமா? நாமெல்லாம் அணியக் கூடாதா? நான் அணியும் கோட்-சூட்டின் நிறம் கூட நம்மைப் போல எந்த ஒளிவுமறைவும் இல்லாத கருப்பு-வெள்ளைதான். எனக்கு எதிரிகளே இல்லை என்று நான் நினைக்கவில்லை. இப்போதும் சொல்கிறேன், தமிழக அரசியலில் போட்டி என்பது திமுகவுக்கும் — திமுகவுக்கும் இடையேதான் (அவர்களின் உட்கட்சிப் பூசல்). இதற்கிடையில் மற்றவர்களுக்கு வேலை இல்லை. விஜய் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று திமுகவும், சில சக்திகளும் சேர்ந்து ஐந்து நாட்கள் பெரும் ஆட்டம் போட்டார்கள். உங்களுக்கு நல்லது செய்ய வந்த இந்த விஜயாய் அல்லது என்னை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க நினைத்த ஸ்டாலினா என்பதை வரும் தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள்.
“நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, ‘ஜென் சி’ (Gen Z) இளைஞர்களைக் கவர்வதற்காக ஆங்கிலமும் தமிழும் கலந்து எக்ஸ் தளத்தில் பதிவு போடும் காமெடி பற்றி நான் பேச வரவில்லை. ஆனால், இப்போது சட்டமன்ற விவகாரங்களை இளைஞர்களும், பெண்களும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுகவுக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றும், நமக்கு வாக்களித்த மக்கள் தற்குறிகள் என்றும் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். உண்மையில் மக்கள் மனதைப் புரிந்து வைத்திருந்தால் இப்படிப் பேச மாட்டார்கள். பேரறிஞர் அண்ணா தொடங்கிய கட்சியை ஒரு குடும்பத்திற்கு அடிமையாக்கியது யார்? திமுக தோற்றதற்கான காரணத்தை உங்கள் குடும்பத்திலேயே கேட்டுப் பாருங்கள் என்று அவர்களது உடன்பிறப்புகளே பேசுகிறார்கள். மக்களைத் தப்பாகப் பேசினால் இந்த விஜய் சும்மா இருக்க மாட்டான்.
நாம் அறிவித்த 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில், 100 யூனிட் மின்சாரம் என்பது திமுக கொடுத்தது அல்ல, அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்தது. ஆட்சி பறிபோன மனவேதனையில் ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மக்களுக்குப் பெரும் தொல்லையாக இருந்த டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளேன். விவசாயிகளின் கடன்களை முடிந்த அளவிற்கு தள்ளுபடி செய்துள்ளேன்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுகவினர் குறை கூறுகிறார்கள். கடந்த ‘மாடல்’ ஆட்சியில் போதைப்பொருளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருந்தால், இன்று பல குழந்தைகளையும் பெண்களையும் நாம் இழந்திருக்க மாட்டோம். தற்போது திறமையான காவலர்களை நியமித்துள்ளோம். அடுத்த வாரம் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப் பெண் அதிரடிப் படை’ தொடங்கப்படவுள்ளது.
மக்களுக்காக நாம் இவ்வளவு நன்மைகளைச் செய்யும்போது, குதிரை பேரம் நடத்துவதாகப் பழி சுமத்துகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் திமுகவும் அதிமுகவும் சேர்ந்துதான் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டன. திமுக என்பது தற்போது வெறும் ‘தீயசக்தி’ மட்டுமல்ல, மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட சக்தி. சாதி, மதம், பணம் கொடுத்து வாக்கு வாங்கும் அரசியலை நாம் உடைத்தெறிந்திருக்கிறோம். தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் மிக ஆவேசமாகப் பேசினார்.
