அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல பேராசிரியர் பிரெஸ்மிஸ்லாவ் ஜெசியோர்ஸ்கி, தனது குழந்தைகளை பார்க்க கடந்த வாரம் கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சிற்கு சென்றிருந்தார்.

இந்த பயணம் அவருடைய இறுதி பயணமாகிவிடும் என யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில், ஏதென்சில் உள்ள முன்னாள் மனைவியின் வீட்டிற்கு சென்ற அவரை, அங்கு ஒளிந்து கொண்டிருந்த குழுவினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பேராசிரியரை கொன்றது வேறு யாரும் அல்ல, அவரின் முன்னாள் மனைவியே. தனது புதிய காதலனுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

அவர்களைத் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, மனைவி, காதலன் உள்பட 5 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, பிரெஸ்மிஸ்லாவ் ஜெசியோர்ஸ்கி, தனது மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். அவர்களுக்குப் பிறந்த 2 பெண் குழந்தைகள் கிரீசில் தாயின் பராமரிப்பில் இருந்தனர். குழந்தைகளை பார்ப்பதற்காக அடிக்கடி கிரீசுக்கு சென்று வந்த அவரின் இந்த பயணம் கொடூரமாக முடிவுற்றது. இந்த சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.