மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாற்றுக்கட்சியினர் பலர் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் ஆர்வமுடன் அ.தி.மு.க.வில் இணைந்து வருவதாகவும், தி.மு.க.வின் நிர்வாகக் குறைபாடுகளால் அக்கட்சியில் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. கூட்டணி குறித்து தி.மு.க.வினரே திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதாகக் கூறிய அவர், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களே தற்போது தி.மு.க.வில் அமைச்சர்களாக இருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு செல்லாத நோட்டு என்றும் கடுமையாக விமர்சித்தார்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், வரும் தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் மதுரையில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர் மூர்த்தியின் திடீர் வளர்ச்சிப் பணிகளைப் பெண்கள் மஞ்சள் பூசுவதை வைத்து கிண்டலாக ஒப்பிட்டுப் பேசினார். .
எத்தனை கட்சிகள் களம் கண்டாலும் போட்டி என்னவோ அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கும் இடையே தான் இருக்கும் என்றும், மக்கள் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறமையை நம்பி வாக்களிப்பார்கள் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
