தர்மபுரி மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான பாலக்கோட்டில், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மீண்டும் 6-வது முறையாகக் களம் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க.வின் பலமான கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க: 8 முறை வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு தி.மு.க: 2 முறையும் காங்கிரஸ்: 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தொகுதியில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வரும் கே.பி.அன்பழகன், 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 எனத் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்தத் தொடர் வெற்றிகளின் நம்பிக்கையில், தற்போது வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 6-வது முறையாக அவர் களம் காணத் தயாராகி வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கே.பி.அன்பழகனை வீழ்த்தப் பலமுனைப் போட்டிகள் நிலவின. அதன்படி தி.மு.க. சார்பில் பி.கே.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைச்செல்வி, தே.மு.தி.க. சார்பில் விஜயசங்கர், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜசேகர் ஆகியோர் போட்டியிட்ட போதிலும், இறுதியில் அ.தி.மு.க.வே வெற்றியைத் தட்டிச் சென்றது.
மேலும் 2026 தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் பாலக்கோடு தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்குமா அல்லது மீண்டும் கே.பி.அன்பழகன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவாரா என்பது தொகுதி மக்களின் தீர்ப்பிலேயே உள்ளது.
