திருத்தணியில் தொடங்கி ராணிப்பேட்டையில்  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் தற்போதைய நிலையை கடுமையாக விமர்சித்தார். தமிழகம் அரை அங்குலம் கூட வளர்ச்சி அடையவில்லை என்று குறிப்பிட்ட அவர், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதையும் மது விற்பனை அதிகரிப்பதையும் உண்மையான வளர்ச்சி என ஏற்க முடியாது என்றார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்குத் தரும் இழப்பீட்டுத் தொகையை, நாட்டுக்காக உயிர்தியாகம் செய்யும் வீரர்களுக்கு அரசு வழங்குவதில்லை என்றும், நெல்லை விட மது பாட்டில்களுக்கே அதிக பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.லஞ்ச ஊழலை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என்று முழங்கிய சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆராய்ச்சி கல்வி வரை அனைவருக்கும் சமமான, தரமான கல்வியையும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்தையும் இலவசமாக வழங்கப்போவதாக உறுதியளித்தார்.

குறிப்பாக, தமிழ் படித்தவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் மட்டுமே அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்தார். சர்க்கரை ஆலைகளை விட மக்களின் உடலில் சர்க்கரை நோய் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முறையான திட்டமிடல் இருந்தால் குறைந்த செலவிலேயே மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று பேசினார்.

மற்ற கட்சிகள் கூட்டணியை நம்பி இருக்கும் நிலையில், தான் எட்டு கோடி மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாக சீமான் பெருமிதம் தெரிவித்தார். வீரன் தனித்துதான் நிற்பான் என்ற கொள்கையோடு ஐந்தாவது முறையாகத் தேர்தலைச் சந்திப்பதாகவும், தன் கால்களையும் உறவுகளையும் நம்பியே இந்தப் பயணம் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

மாற்றத்தைத் தேடும் மக்கள் பழைய அரசுகளையே மீண்டும் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வரப்போகும் தேர்தலில் மொத்தக் கூட்டணியையும் வீழ்த்தி நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் தன்னம்பிக்கையுடன் உரையாற்றினார்.