2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க. அமைத்துள்ள 7 பேர் கொண்ட குழுவுடன் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் நேற்று தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவது உறுதி என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியை ஒதுக்கினாலும் அங்கு போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மீண்டும் திராவிட சித்தாந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்று அவர் குறிப்பிட்டார்.‌ இந்தச் சந்திப்பின் போது அரசியல் சூழல் குறித்துப் பேசிய கருணாஸ், பா.ஜ.க அரசு எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளைச் சுமத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். தனது கட்சி ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடும் என்று தெரிவித்த அவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்கு, “அவர் இப்போது மன உளைச்சலில் இருப்பார்,

அவரைப் பற்றிப் பேச வேண்டாம்” என்று கிண்டலாகப் பதிலளித்தார். விஜய்க்கு எதிராகப் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கு ஒரு 200 கோடி ரூபாய் கொடுத்து கால்ஷீட் கொடுத்தால் தாராளமாக நிற்பேன்” என நகைச்சுவையாகக் கூறினார்.

அதேபோல், தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சியும் இன்று தனது அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி வைக்கப் போவதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் என்றும் தி.மு.க. கூட்டணியிலேயே தொடரும் என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார்.