ஒரு தொடக்கக் கால நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஒரு ஊழியர், தனது நிறுவனத்தில் நிலவும் கடுமையான சம்பள வேறுபாட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சமூக வலைத்தளமான ரெடிட்டில் பகிர்ந்த பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தைப்படுத்தல் பிரிவில் முதன்முறையாக முழு நேரப் பணியில் சேர்ந்த அந்த ஊழியருக்கு மாதச் சம்பளமாக ரூ.43,000 வழங்கப்படுகிறது.
ஆனால், அதே நாளில் நிறுவனத்தில் இணைந்த, 12 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட மற்றொரு ஊழியருக்கு வெறும் ரூ.31,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதை அறிந்து அவர் பெரும் குற்ற உணர்ச்சிக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளார்.
அந்தப் பதிவின்படி, 12 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அந்த மூத்த ஊழியர் ரிலையன்ஸ், விஜய் சேல்ஸ் குரோமா போன்ற முன்னணி நிறுவனங்களில் வேலை பார்த்திருந்தபோதிலும், புதிய துறைக்கு மாறிய காரணத்தினாலும், ஊக்கத்தொகை எதுவும் இல்லாததாலும் மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்று வருகிறார்.
மேலும், இவர்களின் உரையாடலைக் கேட்ட அலுவலக உதவியாளர் தனக்கு ரூ.15,000 மட்டுமே சம்பளம் எனத் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகள் இன்டர்ன்ஷிப் அனுபவம் மட்டுமே உள்ள தனக்கு ரூ.43,000 கிடைக்கும்போது, இவ்வளவு அனுபவம் உள்ளவர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டு நிறுவனம் ஊழியர்களைச் சுரண்டுகிறதோ என்ற சந்தேகமும் குற்ற உணர்ச்சியும் அப்புதிய ஊழியருக்கு ஏற்பட்டுள்ளது.
இப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலர் இதைப் பற்றித் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். வெறும் பணி அனுபவத்தின் ஆண்டுகள் மட்டுமே ஒருவரின் உயர் சம்பளத்தை நிர்ணயிக்க முடியாது என்றும், குறிப்பிட்டுள்ளார்.
சந்தைக்கேற்ற புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, சரியான நேரத்தில் நிறுவனங்களை மாறுவது மற்றும் திறம்படச் சம்பளப் பேரம் பேசுவது மட்டுமே ஒருவரின் வருமானத்தை உயர்த்தும் என்றும் பல பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கார்ப்பரேட் உலகில் வெறும் அனுபவத்தை விட திறமை, சந்தை மதிப்பு மற்றும் பேரம் பேசும் திறன்களே ஊதியத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை இந்த நிகழ்வு தெளிவாக உணர்த்துகிறது.
