சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் இந்த பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தினமும் பேருந்துகள் இங்கிருந்து புறப்பட்டு செல்கிறது.

நேற்று மாலை சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் என்னவென்று பார்ப்பதற்குள் பேருந்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.