நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு அருகே உள்ள படலையார் குளம் கிராமத்தில் ஜே.ஜே நகரில் மகேஷ் (20) என்பவர் வசித்து வந்தார். இவர் மினி லாரி ஓட்டும் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அதிகாலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு மினிலாரியை மகேஷ் ஒட்டி சென்றார். இந்த நிலையில் நாங்குநேரி நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பால பகுதியில் மினி லாரியை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வரும் அரசு பேருந்து மேம்பாலத்தை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது வேகமாக மோதியது.

நேருக்கு நேர் மினி லாரி, அரசு பேருந்து மீது மோதியதால் முன்பகுதி நசுங்கி டிரைவர் மகேஷ் உட்பட முதலைகுளத்தை சேர்ந்த உசிலவேல்(36) என்பவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த மூன்றடைப்பு காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த மகேஷ், உசிலவேல் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ரயில் மேம்பாலம் அருகே ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஏற்கனவே அந்த மேம்பாலத்தில் வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன இதனால் நான்கு வழிச்சாலை இருவழிச் சாலையாக மாற்றப்பட்டு வண்டிகள் இருவழிச் சாலையில் மட்டுமே சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் தான் தற்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பொருள் ஏற்றி சென்ற மினி லாரி ஓட்டுனர் சிறிது கவனக்குறைவாக இருந்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து மீது லாரி மோதி இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.