சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ‘மரண தண்டனை’ விதிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளைத் திடுக்கிட வைத்துள்ளது. சீனாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வீ பெங்ஹே (Wei Fenghe) மற்றும் லீ ஷாங்ஃபு (Li Shangfu) ஆகிய இருவர் மீதே இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீ பெங்ஹே 2018 முதல் 2023 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அவருக்குப் பின் பதவிக்கு வந்தவர் லீ ஷாங்ஃபு. இவர்கள் இருவருமே அதிபர் ஷி ஜின்பிங்கால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியது மற்றும் மிகப்பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. லீ ஷாங்ஃபு மீது லஞ்சம் பெற்றது மட்டுமின்றி, லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கட்சியின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டதாகவும் நீதிமன்றம் சாடியுள்ளது.

சீன ராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த மரண தண்டனையில் ஒரு முக்கிய அம்சம் உள்ளது: இந்த மரண தண்டனை இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்படும். அந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களின் நடத்தை திருப்திகரமாக இருந்தால், தண்டனை ‘ஆயுள் தண்டனையாக’ குறைக்கப்படும். ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டாலும், அவர்களுக்கு எக்காலத்திலும் பரோல் (Parole) அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்பட மாட்டாது. : அவர்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்பட்டு, தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும்.

உலகிலேயே அதிகப்படியான மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடாக சீனா உள்ளது. குறிப்பாக, அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை ஈவு இரக்கமின்றி தண்டிப்பதன் மூலம் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்க ஜி  ஜின்பிங் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடித் தீர்ப்பால் சீன ராணுவம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போது பெரும் பதற்றமும் அச்சமும் நிலவி வருகிறது.