அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2019-ம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் எழுதியதாகக் கருதப்படும் தற்கொலைக் குறிப்பு ஒன்றை நியூயார்க் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
எப்ஸ்டீனுடன் ஒரே சிறை அறையில் இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி நிக்கோலஸ் டார்டாக்லியோன் என்பவரால் இந்தச் சிறுகுறிப்பு கண்டெடுக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கடிதத்தில், “பல மாதங்களாக என்னை விசாரித்தும் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை, அதனால் 15 ஆண்டுகள் பழமையான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகிறார்கள்” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பிரியாவிடை பெறுவதற்கான நேரத்தை ஒருவரே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைப்பது ஒரு வரம்” என்றும், தான் கதறி அழ வேண்டும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அவர் அதில் எழுதியுள்ளார். உலகப் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் எப்ஸ்டீனுக்கு இருந்த தொடர்புகள் குறித்த ஆவணங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தக் கடிதம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
