இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையிலும், இந்தியர்களின் விருந்தோம்பல் மற்றும் மனிதநேயம் குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லண்டனிலிருந்து நேபாளத்திற்குச் சென்று கொண்டிருந்தார். இடையில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மாறுவதற்காக சுமார் 10 மணி நேரம் அவர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

முதலில் சற்றே தயக்கத்துடன் இருந்த அந்தப் பெண், மும்பை விமான நிலையத்தின் உலகத்தரம் வாய்ந்த வசதிகளையும், அங்கிருந்த ஊழியர்களின் கனிவான அணுகுமுறையையும் கண்டு வியந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தியர்களின் உதவி செய்யும் மனப்பான்மையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பரிசோதனையின் போது ஒரு சுவாரசியமான சம்பவமும் நடந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் அவரது பையைச் சோதித்தபோது, உள்ளே ‘சந்தேகத்திற்குரிய பொருள்’ ஒன்று இருப்பதாகக் கூறி அவரை அழைத்துள்ளனர். இதனால் சற்றே பதற்றமடைந்த அந்தப் பெண்ணிற்கு, பிறகுதான் உண்மை தெரியவந்தது. அது வேறு எதுவுமில்லை, ஒரு ‘பவர் பேங்க்’.

விமானப் பயண விதிமுறைகளின்படி, அதனை பையிலிருந்து வெளியே எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காகவே பாதுகாப்பு ஊழியர்கள் அவரை அழைத்துள்ளனர். இந்தச் சிறிய தொழில்நுட்பச் சிக்கலைத் தவிர, தனது ஒட்டுமொத்த அனுபவமும் மிகவும் இனிமையாக இருந்ததாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இரு நாட்டு மக்களும் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த முறை கண்டிப்பாக இந்தியாவிற்குச் சுற்றுலா வாருங்கள், எங்கள் ஊர் விருந்தோம்பலை முழுமையாக அனுபவிக்கலாம் என இந்தியப் பயனர்கள் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நான் இரண்டு முறை இந்தியாவிற்குச் சென்றுள்ளேன். செய்திகளில் காட்டப்படுவதை விட இந்திய மக்கள் மிகவும் அன்பானவர்கள் என மற்றொரு பாகிஸ்தான் பயணி தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் சில நெட்டிசன்கள் “மும்பை வந்த நீங்கள் இங்கேயுள்ள புகழ்பெற்ற வடா பாவ் மற்றும் மிசல் பாவ் உணவுகளைச் சுவைத்தீர்களா?” என நகைச்சுவையாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எல்லையைக் கடந்த இந்த மனிதநேயப் பகிர்வு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Wanzipa (@wanzipa)