காமரெட்டி ஸ்ரீராம் நகர் காலனியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை, அவனது தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமரெட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து 8 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நரசிம்லு என்பவருடன் அந்தப் பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் லிவிங் முறையில்  வாழ்ந்து வந்துள்ளனர்.

சிறுவன் மனநலம் குன்றிய நிலையில் இருந்ததால், தங்களது உறவுக்கும் மகிழ்ச்சிக்கும் அவன் ஒரு தடையாக இருப்பதாக இருவரும் கருதியுள்ளனர். இதனால், அந்த அப்பாவி சிறுவனைத் தீர்த்துக்கட்ட இருவரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். சம்பவம் நடந்த அன்று, அந்தப் பெண் வீட்டில் இல்லாத நேரத்தில், நரசிம்லு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுவனின் கண்களில் முதலில் மிளகாய்ப்பொடியைத் தூவியுள்ளார். வலியால் சிறுவன் அலறியபோது, சற்றும் இரக்கமின்றி மரக்கட்டையால் சிறுவனின் தலையில் மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந் போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது சந்தேகம் எழுந்தது. இருவரிடமும் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவனைக் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பெற்ற தாயே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனைக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது  என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும்  கைதான இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.