தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பணிகளுக்கான நிதித் தேவையைச் சமாளிக்கத் தனது சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகக் கிளம்பியுள்ள தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம் பகுதியில் விஜய்க்குச் சொந்தமாக இருந்த ஒரு வணிக வளாகத்தை (Commercial Complex), அவர் சுமார் 34 கோடியே 65 லட்ச ரூபாய்க்குத் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளருக்கு விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அந்த இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வேலூரில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், “தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் வரப்போகிறேன்” என்று விஜய் அறிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெறவுள்ள பிரம்மாண்டப் பிரசாரக் கூட்டங்கள் மற்றும் கட்சிப் பணிகளுக்குப் பெருமளவில் நிதி தேவைப்படுகிறது.
மற்ற அரசியல் கட்சிகளைப் போல நிதி வசூலில் ஈடுபடாமல், தனது சொந்த நிதியிலேயே இதுவரை கட்சிப் பணிகளைச் செய்து வந்த விஜய்க்கு, தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலேயே தனது முக்கியச் சொத்துக்களை விற்கும் முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
