தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் விஜய் வாகனப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுக தவெக தொண்டர்களிடமிருந்து உற்சாக வரவேற்பைப் பெற்ற விஜய், நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது: “கடந்த தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? நாங்கள் நடப்புக்கு சாத்தியமானவற்றை மட்டுமே கூறுவோம். போலி வாக்குறுதிகளைச் சொல்லமாட்டோம். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில்லை. மூச்சுக்கு 300 முறை  ‘அம்மா’ என  சொல்லிவிட்டு, ஜெயலலிதா கூறிய அனைத்தையும் மறந்துவிட்டு, பொருந்தாத கூட்டணிகளை நியாயப்படுத்தும் நிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். நாங்கள் அப்படி இருக்கமாட்டோம்” என்றார்.

“நீட் ஒளிக்கப்பட்டதா? கல்விக்கான நிதி வழங்கப்பட்டதா? தமிழ்நாட்டுக்குத் தேவையான அம்சங்களை பாஜக நிறைவேற்றவில்லை. இந்த சந்தர்ப்பவாத கூட்டணிகள் ஏன்? எம்.ஜி.ஆர். தொண்டர்கள் கேட்கிறார்கள். அதிமுக, பாஜக நேரடி உறவு கொண்டவர்கள். திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய ஒத்துழைப்புண்டு. இவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்” என்றார் விஜய்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கூறிய கருத்துகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்ததாவது: “பொன்விழாவை கொண்டாடிய அதிமுக பற்றி விமர்சிக்க விஜய்க்கு தகுதியில்லை. அரசியலுக்கு இவர் புதிதாக வந்தவர். அவருக்கு இன்னும் ஒன்றும் தெரியாது. அவர் ஒரு ‘கத்துக்குட்டி’. எங்கள் கூட்டணியைப் பற்றி பேச அவருக்கு உரிமையில்லை. தனது வேலையைப் பார்ப்பது நல்லது. விஜய் மாவட்டத்துக்கு ஒரு கூட்டம் செல்கிறார்; ஆனால் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பிரசாரம் செய்கிறார்” என்றார்.