ஆந்திர மாநில சட்டசபையில் கடந்த ஆட்சியில் நிலவிய சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான நந்தமூரி பாலகிருஷ்ணா பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, “சைக்கோ” என திட்டிய பாலகிருஷ்ணாவின் வார்த்தைகள், சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்வினை தெரிவித்தனர். இரு தரப்பிடையேயான வாக்குவாதம், சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி , பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ் பேசியதாவது:
“முந்தைய ஒய்.எஸ்.ஆர். ஆட்சியில், திரையுலக பிரச்சனைகள் குறித்து பேச, தெலுங்கு நடிகர்கள் ஜெகனை சந்திக்க விரைந்தனர். ஆனால், ஜெகன் அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை. பின்னர் சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே நேரம் வழங்கினார்,” எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பாலகிருஷ்ணா, “அந்த நடிகர்கள் ஒரு சைக்கோவை சந்திக்க சென்றார்கள்,” எனக் கூறினார். இதனை தொடர்ந்து அவர், “சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான் ஜெகன் நடிகர்களை சந்தித்தார் என்று கூறுவது பொய் என்றார்.
இது குறித்து விளக்கம் அளித்த நடிகர் சிரஞ்சீவி, “ஜெகன்மோகன் ரெட்டி தனது இல்லத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதன்படி சென்று, தெலுங்குத் திரையுலகம் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்து பேசினேன்,” என்று கூறினார். மேலும் இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
