ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், 28 வயது இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் புங்கனூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் உமாசங்கர், மற்றும் ஊர் காவல்படையைச் சேர்ந்த கிரண் குமார் ஆகிய இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “நீ யாரிடமாவது இது பற்றி சொன்னால், உன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் புங்கனூர் போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, தமக்கு நேர்ந்த கொடுமையை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பங்காருபாளைம் போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு, வழக்கு பதிவு செய்தனர். பின்னர், உமாசங்கர் மற்றும் கிரண் குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
