ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் காதலியின் வீட்டிற்குச் சென்ற வாலிபர், காதலியின் தங்கை மற்றும் அவரது நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த 25 வயதான மனஸ் ராய், ரோஷன் நகரில் வசிக்கும் தனது காதலியைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த காதலியின் தங்கை, தனது காதலன் அமன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மனஸ் ராயைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த மனஸ் ராய், டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற மனஸின் நண்பர் ஹர்ஷுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாகப் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, ஒரு சிறுவன் உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரின்ஸ், ரோஷன், ராகுல் மற்றும் ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியான அமன் தற்போது வரை தலைமறைவாக உள்ளதால், அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் கண் முன்னாலேயே காதலியின் தங்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து அக்காளின் காதலனைத் தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், முக்கியக் குற்றவாளி சிக்கினால் மட்டுமே இந்தக் கொடூரக் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.