டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் போலி ‘சென்சோடைன்’ பற்பசை தயாரித்து வந்த சட்டவிரோத தொழிற்சாலையை டெல்லி போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்து மூடியுள்ளனர். இந்தச் சோதனையின்போது, ரோகிணி பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹரியோம் மிஸ்ரா என்பவரைக் கைது செய்த போலீசார், அங்கிருந்த 13,000-க்கும் மேற்பட்ட பற்பசை குழாய்கள் மற்றும் 130 கிலோ எடையுள்ள சந்தேகத்திற்குரிய நீல நிறப் பசையைக் பறிமுதல் செய்தனர்.

மிகவும் அசுத்தமான சூழலில், எந்தவித உரிமமுமின்றி இயங்கி வந்த இந்த ஆலை, ரசாயனங்களைக் கொண்டு தரமற்ற பற்பசைகளைத் தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரபலமான பிராண்டுகளின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்படும் இத்தகைய பொருட்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பற்பசைகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இவை டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை வாங்கும்போது, அதன் பேக்கிங் தரம், பேட்ச் எண்கள் மற்றும் முத்திரைகளைச் சரிபார்த்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மோசடி கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்கவும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.