உத்தரபிரதேச மாநிலத்தில், ஒரு திருமண மண்டபத்திற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று, அங்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் என 60 பேரை கண்மூடித்தனமாகப் பல இடங்களில் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென மண்டபத்திற்குள் புகுந்த ஒரு தெருநாய், அங்கிருந்தவர்களைக் கடிக்கத் தொடங்கியுள்ளது.
இதைக் கண்டு பயந்துபோன உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் மண்டபம் முழுவதும் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இந்தக் கொடூரமான நாய் கடி தாக்குதலில், மண்டபத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலருக்கு முகத்திலும், கை, கால்களிலும் ஆழமான காயம் ஏற்பட்டதால் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிறிய மகிழ்ச்சியான நிகழ்வு, ஒரு வெறிநாயால் பெரும் துயரமாக மாறியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
