உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு தெரிந்த நபர் ஒருவர், “உன் அம்மா உன்னை அழைக்கிறார்” என்று கூறி ஆசை வார்த்தை காட்டி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அந்த நபர் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ஆள் நடமாட்டமற்ற காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து, அந்த இளம்பெண்ணை மூன்று பேரும் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு, மயக்கமடைந்த நிலையில் இருந்த அந்தப் பெண்ணை குற்றவாளிகள் ஒரு மருத்துவமனையின் நுழைவாயில் அருகே வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அந்த மூன்று இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
