குடியரசு தின உரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை அமைச்சர் குறிப்பிடத் தவறியதால், பெண் அதிகாரி ஒருவர் மேடையை நோக்கி குரல் எழுப்பிய சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிஷ் மகாஜன், குடியரசு தின விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரை பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. அமைச்சரின் உரையில் இந்துத்துவ தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கிய அண்ணல் அம்பேத்கரின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறை அதிகாரி மாதவி ஜாதவ், பார்வையாளர் வரிசையில் இருந்து எழுந்து அமைச்சரை நோக்கிச் சத்தமாக கேள்வி எழுப்பினார்.

இது குறித்து மாதவி ஜாதவ் கூறுகையில், “அனைவருக்கும் அதிகாரம் அளித்த அம்பேத்கரின் பெயரைத் தவிர்த்தது திட்டமிட்ட செயல். இதற்காக என்னை பணி இடைநீக்கம் செய்தாலும் எதிர்கொள்ளத் தயார். ஆனால் பாபாசாகேப் அவமதிக்கப்படுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து அறிந்த ‘வஞ்சித் பகுஜன் அகாடி’ கட்சித் தலைவர் பிரகாஷ் பெண் அதிகாரி மாதவி ஜாதவைத் தொலைபேசியில் அழைத்துத் தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசு தினத்தன்று அம்பேத்கரை அவமதித்த அமைச்சர் கிரிஷ் மகாஜன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறேன். விரைவில் அவர் மீது வழக்குத் தொடரப்படும்” என்றார்.

சர்ச்சை முற்றியதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த அமைச்சர் கிரிஷ் மகாஜன், “எனது உரையில் டாக்டர் அம்பேத்கரின் பெயர் விடுபட்டது எதிர்பாராமல் நடந்த ஒரு கவனக்குறைவுதான். அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. வேண்டுமென்றே நான் அவரைத் தவிர்க்கவில்லை” என்று கூறி வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், ஒரு அரசு அதிகாரியே அமைச்சரின் பேச்சை எதிர்த்து மேடையிலேயே குரல் எழுப்பியது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.