மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போரில் சமாதானத் தூதுவர் போல நாடகமாடும் பாகிஸ்தானின் சதிச் செயல்கள் தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளன.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என கூறிக்கொண்டு, மறுபுறம் போர்ச் சூழலைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானின் எல்லையோர நிலப்பரப்பை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான ‘டுராண்ட் கோடு’ (Durand Line) எல்லைப் பகுதியில், சுமார் 32 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை வேலி அமைத்து பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக, பக்திகா மாகாணத்தில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆப்கானிஸ்தான் நிலத்தை ஆக்கிரமித்து “பாகிஸ்தானின் வரைபடம் விரிவடைகிறது” என அந்நாட்டு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் தன்னை ஒரு நடுநிலையான நாடாகக் காட்டிக்கொள்ள முயலும் பாகிஸ்தான் பிரதமர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானியத் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஆனால், கள நிலவரப்படி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதிகளைத் தந்திரமாக ஆக்கிரமித்து வருவது அண்டை நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் தரப்பு இந்த ஊடுருவலை மறுத்த போதிலும், கூகுள் எர்த் செயற்கைக்கோள் படங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பாகிஸ்தான் நிரந்தர வேலிகளை அமைத்து வருவதை உறுதிப்படுத்துகின்றன.

பாகிஸ்தானின் இந்த இரட்டை வேட நிலைப்பாடு, ஏற்கனவே பதற்றமாக உள்ள ஆசியப் பிராந்தியத்தில் மற்றொரு போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.